ம.பி. மருத்துவமனையில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் 2ம் நாளாக சூறை!: நோயாளிகளின் உறவினர்கள் ஆவேசம்..!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் 2வது நாளாக கொள்ளையடித்து சென்றது அம்மாநில அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும். இந்நிலையில், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்வதறியாது திகழ்ந்து நின்றனர்.

தற்போது அந்த மருத்துவமனையில் போலீசார் நிறுத்தப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் சாதூல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகின. இதனை மறுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வா சாரக், தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உபரியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் 2 நாட்களாக நடைபெற்று வரும் சிலிண்டர்கள் கொள்ளை அவரது கூற்றை பொய்யாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Related Stories: