வணிகம், வர்த்தக நிறுவனங்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிடில் நடவடிக்கை-சப்-கலெக்டர் எச்சரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று 2ம் அலை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். டிஎஸ்பிக்கள் சிவக்குமார், விவேகானந்தன், தாசில்தார்கள் தணிகைவேல், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், மெடிக்கல், ஓட்டல், தனியார் பஸ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வர்த்தக சபை, வியாபாரிகள் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தின்போது, சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஆண்டில் பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகமாவது நாளுக்குநாள் குறைய  துவங்கியது. இதற்கு வர்த்தக நிறுவனத்தினரும் ஒரு காரணமாக இருந்துள்ளது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா 2ம் அலை துவங்கியதிலிருந்து, பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதது வேதனையை ஏற்படுத்துகிறது.இதில் குறிப்பாக கடைதாரார்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு அது குறித்து அறிவுறுத்துவதில்லை என்ற புகார் எழுகிறது.

தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் குறிப்பாக நகரில் கடந்த ஆட்டை விட இப்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. இந்த நிலை நீடித்தால், வரும் காலங்களில் யாருக்கு எந்த நிலமை வரும் என்று தெரியாது அதனை ஒன்றும் செய்யவும் முடியாது.  எனவே, கொரோனா தொற்று வேகமாக பரவும் இவ்வேளையில், அதன் பாதிப்பு மேலும் அதிகமாவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளில் முன்பு, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறை குறித்த வாசகம் வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கை கழுவும் இடத்தில் சோப்பு வைக்க வேண்டும். உணவு தயாரிப்பு  மற்றும் பரிமாறும் பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது. உணவு வகைகள் நல்ல வேக வைத்து மூடி வைத்து பாதுகாக்க வேண்டும்.

தரை தளத்தை மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தங்கும் வசதியுள்ள ஓட்டல்களில் தங்கும் வெளியூர் நபர்களின் விவரத்தை, உடனே உணவு பாதுகாப்புதுறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மெடிக்கல்களில், டாக்டர்கள் கையொப்பம் இல்லாத பேப்பரில் மருந்து மாத்திரைகள் குறித்து எழுதினால் கொடுக்கக்கூடாது.

கடையில் இருப்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் முதலில் அபராதம் விதிக்கப்படும். கடையை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வியாபாரிகள் ஒத்துழைப்பை மேலும் தொடர கேட்டுகொள்கிறோம்’’ என்றார்.

Related Stories:

>