கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து-வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

திருவாரூர் : கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தற்போது கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் யூரியா, டிஏபி மற்றும் இதர உரங்கள் மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்தாண்டு விலையிலேயே தற்போதும் டிஏபி, பொட்டாஷ் சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் அனைத்தும் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசின் உரத்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்வதுடன். உர விநியோகத்தை கண்காணிக்கவும், உரம் சம்பத்தப்பட்ட முறைகேடுகளை தவிர்க்கவும் பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்களது ஆதார் எண்ணுடன் சென்று கைரேகையை பதிவு செய்து உரம் பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் அளவுக்கு அதிகமாக செயற்கை உரங்களை இடுவதால் பண விரயத்தோடு மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உரங்களை இடுவதால் மட்டுமே உரச் செலவை குறைக்க முடியும். விவசாயிகள் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உரமிட வேண்டும். விவசாயிகள் மண்வள அட்டையை பயன்படுத்தி தேவையான அளவு உரத்தை பயிருக்கு இட்டு நல்ல மகசூல் பெற வேண்டும்.

எனவே, உர விற்பனை நிலையங்களில் ஏற்கனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும்போது உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலையினை பார்த்து உறுதி செய்த பின்னர் அதற்குரிய தொகையினை மட்டும் கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழிக்கப்பட்டு இருந்தாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது உரத் தட்டுப்பாடு இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரையோ அல்லது வேளாண் அலுவலரையோ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>