×

திபெத் மார்க்கெட் அடைப்பு

ஊட்டி :  சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வராத நிலையில் மீண்டும் திபெத் மார்க்கெட் மூடப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே திபெத் அகதிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்க்கெட் ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், ஆடைகள், ஸ்வெட்டர், சால்வை, தொப்பி மற்றும் ஜெர்கின்கள் போன்றவைகளை திபெட் மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே இவர்களின் பொருட்கள் விற்பனை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் பெரும்பாலும் செல்வதில்லை. தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே இவர்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இவர்களது மார்க்கெட் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால், கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று முதல் சுற்றுலா தலங்களை மூடவும், சுற்றுலா பயணிகள் ஊட்டி வர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தாவரவியல் பூங்கா நேற்று மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாரும் வராத நிலையில், நேற்று முதல் திபெத் மார்க்கெட்டும் மூடப்பட்டது. இனி சுற்றுலா பயணிகள் வர அனுமதியளிக்கப்படும் வரை இந்த கடைகள் திறக்க வாய்ப்பில்லை. இது குறித்து சில திபெத் அகதிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி கடை வைத்துள்ள நாங்கள் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களது வாழ்வாதாரமும் பாதித்துள்ளது, என்றனர்.

Tags : Tibet , Ooty: The Tibetan market has been closed again due to the closure of tourist sites.
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...