கொரோனா பாதிப்பால் வங்கியில் பணம் கட்ட முடியாமல் ஏலம் போகும் அடகு நகைகள்-வருமானம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு

சாயல்குடி : ஓராண்டிற்கு மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால் ஏழை,எளிய, நடுத்தர மக்கள் அடமானம் வைத்த நகைகளை திருப்ப முடியாததால் ஏலத்திற்கு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழில், பனைமரத்தொழில், உப்பளம், சேம்பர், விறகு வெட்டுதல், கரிமூட்டம் போடுதல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மண்சார்ந்த தொழில், பாரம்பரிய தொழில்கள், அமைப்புசாரா மற்றும் உற்பத்தி, வியாபாரம் சார்ந்த தொழில்கள் நடந்து வருகிறது.

இளைஞர்கள், பட்டதாரிகள் முதலான சில தரப்பினர் கோவை, திருப்பூர், சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள தொழில்சார்ந்த நகரங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். கிராம பகுதிகளில் நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோ னா வைரஸ் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வேகமாக பரவியது. தொடர் ஊரடங்கால் வேலை இழப்பு, தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்த சிறிய மூக்குத்தி முதல் சங்கிலி வரையிலான இருக்கின்ற தங்க நகைகளை அந்தந்த பகுதியிலுள்ள வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களிடம் அடமானம் வைத்தனர்.

நகை கடன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் 5 மாதங்கள் வரை கட்டவில்லை என்றால் தேசிய வங்கிகள் அந்த நகைகளை ஏலத்திற்கு கொண்டுவரும். தனியார் நிதி நிறுவனங்கள் 12 மாதங்கள் வரை காத்திருக்கும், கூடுதலாக 3 மாதம் கிரேஸ் அவகாசம் கொடுக்கும். இதற்கு பின்பே அதிகபட்சம் 15 மாதங்களுக்கு பிறகே ஏலத்திற்கு செல்லும்.

ஆனால் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளால் நகைகளுக்கு வட்டி கட்ட முடியாமல் போனது. நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு அபதார வட்டியும் விதிப்பதால் எந்தவொரு வட்டியும் கட்ட முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பு வந்ததற்கு பிறகு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண் டே சென்று உச்சபட்ச நிலையை அடைந்தது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பொதுமக்களின் தங்க நகைகளுக்கு கூடுதல் பணம் கொடுத்தது. இதனால் வீட்டிலிருந்த குண்டுமணி நகையை கூட அடமானம் வைத்து விட்டனர்.

இந்நிலையில் மீண்டும் தங்கம் விலை சற்று சரிவானது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகையை மீட்கவும் அல்லது வட்டியை கட்டுங்கள், மீட்டு பிறகு அன்றைய மார்க்கெட் விலைக்கு மறு அடமானம் வைக்கவேண்டும் என கடுமையான நிர்பந்தங்களை விதித்து வருகிறது.

ஆனால் போதிய வருமானம் இன்றி அடமான நகைகளுக்கு வட்டி, அசல் கட்ட முடியாத நிலை இருப்பதால், நகைகளை மீட்பது சாத்தியமற்று போனது. இதனால் தங்க நகைகள் ஏலம் போய் வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் திருமணம் ஆகும் வயதை எட்டிய பெண்களை, நகை போட்டு மணம் முடித்து கொடுக்க முடியாமல் பெற்றோர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கை கொடுக்காத தள்ளுபடி

தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவு விவசாய கடன், கூட்டுறவு நகை கடனையும் தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த திட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை இதுவரை திருப்பி வழங்க வில்லை. பொதுமக்களும் நாள் தோறும் இந்த வங்கிகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

மேலும் தேசிய வங்கிகளை காட்டிலும் கூட்டுறவு வங்கிகளில் வட்டி அதிகம் என்பதாலும், எதிர்பார்க்கும் தொகையும் கிடைப்பதில்லை என்பதாலும், பெரும்பாலான பொதுமக்கள் தேசிய வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களில் அடமானம் வைத்துள்ளனர். இதனால் அரசின் தள்ளுபடி திட்டம் பொருந்தாது என்பதால் நகைளை திருப்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: