இரவு நேர ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள் அமல் திருமண நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அனுமதி தேவையில்லை-நடைமுறைகளை பின்பற்ற கலெக்டர் வேண்டுகோள்

நெல்லை :  தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. திருமண நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அனுமதி கிடையாது. அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அரசால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து நெல்லை கலெக்டர் விஷ்ணு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு, எஸ்பி மணிவண்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது: தற்போதைய அரசு விதிமுறையின்படி திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர்களுக்கு மிகாமலும், இறப்பு நிகழ்வில் 50 பேர்களுக்கு மிகாமலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.   இதற்கென சிறப்பு அனுமதி ஏதும் மாவட்ட நிர்வாகத்திலிருந்து தனியே பெற தேவையில்லை. சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்வுகளில் சமுதாயக் கூடம், திருமண மண்டப நிர்வாகத்தினர், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிப்பதை கண்காணித்திடவும், திரையரங்குகள், பொது சந்தைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும்,  விதிமுறைகள் மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ஊரக பகுதிகளில்  வட்ட அளவிலும், மாநகராட்சி பகுதிகளில் மண்டல அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இந்தக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மார்ச் 1ம் தேதி முதல் இதுவரை நடத்திய ஆய்வில் விதிமுறைகளை மீறுவோரிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.55 லட்சத்து 96 ஆயிரம் வசூலிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகராட்சி மூலம் அனைத்து வரிசெலுத்தும் மையங்களிலும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் அலுவலகங்களிலும் கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ள புறக்காவல் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊரடங்கை அமல்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இயலும் என்பதால் பொதுமக்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் முககவசம் தவறாது அணிந்து சமூக இடைவெளி பேணுவதோடு அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெற வேண்டும். நோய்த் தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி கமிஷனர்  கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்த்ராச்சலம்,  சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்

பொதுமக்கள், கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்கும், புகார்கள் அளிக்கவும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கோவிட் - 19  கட்டுப்பாட்டு மையத்தை 0462- 2501070 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொள்ளலாம். மேலும் 63740 13254 மற்றும் 94999 33893 என்ற கைப்பேசி எண்களுக்கு  குறுஞ்செய்தி வழியாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் அளிக்கலாம் எனவும் கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories: