நெல்லை மாநகர பகுதியில் இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

நெல்லை : தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பஸ் போக்குவரத்து, தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள், இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது. டவுன் பொருட்காட்சி திடலில் இருந்து இரவு 9 மணியுடன் பஸ் சேவை முடிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பஸ் சேவைகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து மாநகருக்குட்பட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. வழக்கமாக நள்ளிரவு 12 மணி வரை வாகன போக்குவரத்து காணப்படும் வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை மார்க்கெட், டவுன் ரதவீதிகள், பேட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகள், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

பழையபேட்டை, தச்சநல்லூர் கரையிருப்பு, பாளை டக்கரம்மாள்புரம், கேடிசி நகர், வி.எம்.சத்திரம், மேலப்பாளையம் கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் நெல்லை புதிய பஸ் நிலையம், பாளை மார்க்கெட், வண்ணார்பேட்டை ரவுண்டானா உள்ளிட்ட 17 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே ஊரடங்கு உத்தரவை மீறி வந்த 4 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் கண்காணிப்பு குறித்து துணை கமிஷனர் னிவாசன் கூறுகையில், மாநகரில் 23 சோதனை சாவடிகளில் நேற்றிரவு முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 350 போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்்தரவை மீறுபவர்கள் மற்றும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும், என்றார். பேட்டியின் போது பாளை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: