கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் 9 மணிக்கு வெறிச்சோடிய திருச்சி மாநகர்-கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது

திருச்சி : கொரோனா 2வது அலை ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து இரவு 9 மணிக்கு அனைத்து கடைகள், மால்கள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் திருச்சி மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோயால் பலரும் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலையில் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறையத்துவங்கியதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த கொரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக வேகமெடுக்க துவங்கியது. உருமாறிய கொரோனா பரவுவதால், தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்று 2வது அலை தமிழகத்தில் வேகமாக பரவுவதால் நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு, ஞாயிறு கிழமை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் ஊரடங்கான நேற்று ஓட்டல்கள், மால்கள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் இரவு 9 மணிக்கே மூடப்பட்டன. அவ்வாறு மூடாத கடைகளை போலீசார் மூடும்படி எச்சரித்தனர்.

இதனால் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய பலர் அவதியடைந்தனர். பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்கூட்டியே அலுவலக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.

சில நிறுவனங்கள் வாகன வசதி செய்து கொடுத்தன.

ஆட்டோ, டாக்சி போன்ற வாடகை வாகனங்களின் போக்குவரத்தும் இரவு 9 மணிக்கு மேல் சேவையை நிறுத்தின. சில இடங்களில் 9 மணிக்கு முன்னதாக சவாரிக்கு சென்று வீடு திரும்பிய ஆட்டோ, டாக்சி டிரைவர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டியதால் ஒரு சில இடங்களில் டிரைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகள் 9 மணிக்கு அடைக்கப்பட்டாலும், மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு வீடு திரும்பி சில இடங்களில் தாமதித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் திருச்சி மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

Related Stories: