கொரோனா தொற்று கட்டுப்பாடு எதிரொலி ஏலகிரி மலை சுற்றுலா தலம் மூடல்-ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்

ஜோலார்பேட்டை : கொரோனா தொற்று கட்டுப்பாடு எதிரொலியாக ஏலகிரி மலை சுற்றுலா தலம் நேற்று முதல் மூடப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக, ஏழைகளின் ஊட்டியாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளுடன் கட்டுப்பாடுகளை அறிவித்து கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதனால் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு கூடங்களும் மூடப்பட்டது.

இதனால் பல்வேறு பகுதியிலிருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி படகுத்துறை இயற்கை பூங்கா சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>