அரசு விதிமுறைகள்படி அடக்கம் செய்யப்பட்டது கொரோனாவுக்கு பலியானவர் உடலை பார்க்க முடியாமல் உறவினர்கள் கதறல்-பாணாவரத்தில் சோகம்

பாணாவரம் : நாடு முழுவதும், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 73 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், 1 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919தாக தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மட்டும், ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனாவுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 329தாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்கவர், திருவள்ளூரில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் தங்கியிருந்து, பல்வேறு வங்கிகளில் இருந்து லோன் வாங்கி கொடுக்கும் கமிஷன் ஏஜென்டாக பணி புரிந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர் வேலை சம்பந்தமாக டெல்லி சென்று திரும்பினார். அதிலிருந்து இவருக்கு காய்ச்சல், சளி இரும்பல் அதிகரிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான பாணாவரம் சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  கொரோனா விதிமுறைகள் படி உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஆம்புலன்சில் பாணாவரம் சுடுகாட்டிற்கு உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அனுமதிக்காமல், அங்கு தயாராக இருந்த 10 அடி குழியில், பிளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பிச்சாண்டி, சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர். அப்போது அவரது உடலை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியவில்லையே என்று கூறி, உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories: