அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வெறிச்சோடியது-பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி

சேலம் :  கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

சேலத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, இரவு 9 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடும்படி மைக் மூலம் போலீசார் எச்சரிக்கை செய்தனர். தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகள் இரவு 9.30 மணிக்கு கடையை அடைத்தனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு, பணிமனைக்கு சென்றன. அதிகாலை 4 மணிக்கு பிறகு செல்லும் ஒரு சில பஸ்கள் மட்டும், பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பஸ்கள், எருமாபாளையம்  டிப்போவுக்கு சென்றன. இதனால், பஸ் ஸ்டாண்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் சின்னகடைவீதி, பெரியகடைவீதியில் பூ, பழம் வியாபாரிகள் வழக்கமாக இரவு 11 மணி வரை வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். இரவு நேர ஊரடங்கால் 9.30 மணிக்கே கடைவீதி வெறிச்சோடியது. அதேபோல், ஓமலூர் மெயின் ரோடு, சாரதா கல்லூரி சாலை, பெரியார் மேம்பாலம், குகை,  அம்மாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெளியூர்களில் இருந்து சேலம் வந்த ஒரு சில பயணிகள், சொந்த ஊருக்கு பஸ்கள் இல்லாததால், பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து தூங்கினர். இரவு நேர ஊரடங்கையொட்டி சேலம் மாநகரம், மாவட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு 10 மணிக்கு மேல் ஆங்காங்கே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: