கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வேலூர் பழைய மீன் மார்க்கெட்டில் சில்லறை காய்கறி கடைகள் இயங்கின-அதிகாரிகளின் சமரசத்தை ஏற்ற நடைபாதை வியாபாரிகள்

வேலூர் : பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் சில்லறை காய்கறி வியாபாரிகள் நேற்று கடைகளை திறந்தனர்.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்படி, சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் நேதாஜி மார்க்கெட் காய்கறி மொத்த மற்றும் சில்லறை கடைகளை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேதாஜி மார்க்கெட் காய்கறி சில்லறை கடைகளை மாங்காய் மண்டி அருகில் இடம் மாற்றவும், மொத்த காய்கறி கடைகளை நேதாஜி மார்க்கெட்டிலேயே செயல்பட வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. பூக்கடைகளை டவுன் ஹால் மற்றும் ஊரிசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், நேற்று முன்தினம் மாங்காய் மண்டி அருகில் சில்லறை காய்கறி வியாபாரிகள் 20 பேர் மட்டுமே சென்றனர்.

அவர்களும் வாடிக்கையாளர்கள் வராததால் விரக்தியடைந்த நிலையில் இடத்தை காலி செய்தனர்.

இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நேதாஜி மார்க்கெட் சில்லறை காய்கறி கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்துக்கும், மொத்த வியாபார கடைகளை மாங்காய் மண்டி அருகிலும் மாற்றவும், பூ மார்க்கெட்டை டவுன் ஹாலில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று காலை நேதாஜி மார்க்கெட் சில்லறை காய்கறி வியாபாரிகள் பழைய மீன் மார்க்கெட் வளாகம் சென்றனர். அங்கு ஏற்கனவே கடை நடத்துவதாக கூறிக் கொள்ளும் நடைபாதை வியாபாரிகள் திரண்டு சில்லறை காய்கறி வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், 2வது மண்டல உதவி ஆணையர் பாலு, வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் ஞானவேலு, பாலு ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதை வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நடைபாதை வியாபாரிகள், ‘நாங்கள் இங்கு கடையை நடத்துவதற்கு தினமும் ₹100 கட்டி வருகிறோம். எங்கள் இடத்தை விட்டுத்தர முடியாது’ என்றனர்.அவர்களிடம், ‘இது தற்காலிக ஏற்பாடுதான்’ என்று கூறி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து 140 சில்லறை காய்கறி வியாபாரிகள் இங்கு கடை நடத்தவும், 55 கடைகள் நடைபாதை பழ வியாபாரிகளே நடத்திக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து காய்கறி சில்லறை கடைகள் நேற்று காலை 10.30 மணியளவில் திறக்கப்பட்டன.

மாங்காய் மண்டி அருகில் மொத்த காய்கறி வியாபாரம்: வேலூர் மாங்காய் மண்டி அருகில் காய்கறி மொத்த வியாபாரிகளுக்காக 91 ஷெட்கள் அமைக்கப்பட்டன. இதில் 6 கடைகள் இடத்தின் உரிமையாளருக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த இடத்தை காய்கறி மொத்த வியாபாரிகளிடம் மொத்தமாக ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நேற்று மொத்த வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் ஞானவேலு, பாலு ஆகியோர் கூறும்போது, ‘இந்த இடத்தை எங்களிடம் முழுமையாக ஒப்படைத்து, கூறியபடி கடைகளை திறக்க அனுமதித்தால் மட்டுமே அங்கு செல்வோம். இல்லை என்றால் மீண்டும் நேதாஜி மார்க்கெட்டுக்கே திரும்புவோம்.

தமிழகத்தில் எந்த இடத்திலும்  மார்க்கெட் இடம் மாற்றப்படவில்லை. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று நாங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டோம்.

இந்நிலையில் ஏற்கனவே 35 பேருக்கு கடைகள் இல்லாத நிலையில் கூடுதல் கடைகளை கேட்டால் கொடுக்க முடியாது. அதேபோல் மாங்காய் மண்டியில் காய்கறி மொத்த வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் வெளியே கடைகள் அனுமதித்தாலும் நாங்கள் நேதாஜி மார்க்கெட்டுக்கு திரும்பிவிடுவோம்’ என்றனர்.

மாற்றி பேசும் மாநகராட்சி அதிகாரிகள்

லாங்கு பஜார், மண்டி வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை கடைகள் அமைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது. இதற்கான வாடகையாக ₹100 நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாடகை அதிகம் என்றும், அங்கு கடை வைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்றும் கூறி நடைபாதை வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்தனர்.

பின்னர் ஒரு வழியாக அவர்களை அங்கு கடைகள் வைக்க சம்மதிக்க வைத்தது மாநகராட்சி. சில நாட்களில், அங்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறி மீண்டும் லாங்கு பஜாருக்கே நடைபாதை வியாபாரிகள் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் மாநகராட்சிக்கு ₹100 தினசரி வாடகை கட்டணமாக செலுத்தியும் வருகின்றனர்.

அதற்கான ரசீதும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மாநகராட்சியும் அவர்களை மீன் மார்க்கெட்டுக்குள் கொண்டு வர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் பழைய மீன் மார்க்கெட் கடைகளுக்கு தினசரி வாடகையாக ₹100 கட்டுவதில்லை என்று கூறினர்.

Related Stories:

>