கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு கடத்திய ₹45 லட்சம் மதுபாட்டில்கள் கார்களுடன் பறிமுதல்-4 பேர் அதிரடி கைது

சித்தூர் : கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு கடத்திய ₹45 லட்சம் மதுபாட்டில்களை கார்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் 2வது காவல் நிலையத்தில் ஏஎஸ்பி  ரிசாந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சித்தூர் அடுத்த தேனபண்ட ராஜீவ் நகர் காலனி பகுதியில் உள்ள முள்புதரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டில்கள் இறக்கு மதி செய்யப்பட்டு வருவதாக 2வது காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் யுகாந்தர், சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜூனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, 3 கார்களில் உள்ள மதுபாட்டில்களை முள்புதரில் 6 பேர் இறக்கி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில், 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தேனபண்ட ராஜீவ் நகர் காலனியை சேர்ந்த ஜோதீஸ்வரன்(39), குறபலகோட்டை அடுத்த  கொத்த குறவபள்ளி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனா(33), கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள சிங்கன்அல்லி கிராமத்தை சேர்ந்த மோகன்(28), ஐராலா அடுத்த நாம்பள்ளி கிராமத்ைத சேர்ந்த பிரதீப்(25) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், குடிப்பள்ளி சாலையில் உள்ள பஸ்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஒயின்ஷாப்பில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஒரு குவாட்டர் பாட்டில் ₹75 வாங்கி வந்து, சித்தூரில் ₹200 விற்பனை செய்வது’ தெரியவந்தது.  

இதையடுத்து, அவர்களிடமிருந்து ₹40 லட்சம் மதிப்பிலான 3 கார் மற்றும் ₹5 லட்சம் மதிப்பலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இதில், நகர டிஎஸ்பி சுதாகர், 2வது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகாந்தர்,  சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: