அலங்காநல்லூர், பாலமேட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை 300 ஏக்கர் பப்பாளி, வாழை, கொய்யா மரங்கள் நாசம்-உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி, வாழை, கொய்யா மரங்கள் சாய்ந்து நாசமடைந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பாலமேடு அருகேயுள்ள வைகாசிபட்டி, எர்ரம்பட்டி, மீனாட்சிபுரம், கோவில்பட்டி உள்பட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு, பலன் தருவாயில் இருந்த பப்பாளி, கொய்யா, முருங்கை, வாழை மரங்கள் மற்றும் மாட்டுத்தீவனம், பூச்செடிகள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பல இடங்களில் புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் எர்ரம்பட்டியில் உள்ள மாட்டு தொழுவத்தின் மீது புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி அதே ஊரை சேர்ந்த பழனியாண்டி (55) மற்றும் அவரது 2 பசு மாடுகள் உயிரிழந்தனர். வைகாசிபட்டி கிராமத்தில் சாலையோரத்தில் இருந்த வேப்ப மரம் மின்கம்பம் மீது சாய்ந்தது.

இதனால் மின்வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், மரம் சாய்ந்து பலியானவர் குடும்பத்திற்கும், 2 மாடுகள் உயிரிழப்பிற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>