யோகி பாபுவின் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கு!: பட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: யோகிபாபுவின் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த படத்தில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் கழிவறைகளை சுத்தம் செய்வது, முடி திருத்தும் தொழிலாளர்களை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அருகதை இல்லை என்று கூறி காரின் பின்னால் ஓடி வர செய்வது, வீட்டின் முன் வாசல் வழியாக வீட்டிற்குள் வர தகுதி இல்லை என கூறுவது போன்ற வசனங்கள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, குறிப்பிட்ட சமுதாய  மனதை புண்படுத்தும் வகையில் மண்டேலா திரைப்படத்தின் காட்சிகள், வசனங்கள் உள்ளதாக கூறி தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், மருத்துவ சமுதாயம் என்ற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த முடிதிருத்துவோர்கள். மருத்துவமனைகளில் மருத்துவ உதவிகளையும், மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வந்த எங்கள் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் மண்டேலா படத்தில் மிக மோசமாக சித்தரித்திருப்பதாகவும், இவை தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அமைந்துள்ளது.

எனவே யோகிபாபுவின் மண்டேலா படத்தை மீண்டும் தணிக்கை செய்து சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு  உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி மஹாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக திரைப்பட தணிக்கை வாரியம்,  பட தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணைக்கு அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Related Stories:

>