துடியலூர் அருகே நகை பறித்த வாலிபரை மடிக்கி பிடித்த மூதாட்டி-யூ டியூபில் பார்த்து முயற்சித்ததாக கைதானவர் வாக்குமூலம்

பெ.நா.பாளையம் : துடியலூர் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (65). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ஒரு கல் விழுந்தது. எனவே அவர் திரும்பி பார்த்தார். அப்போது பின்பக்கமாக பைக்கில் வந்த மர்ம நபர் ராமாத்தாள் கழுத்தில் கிடந்த தங்க செயினை பிடித்து இழுத்தார்.  

சுதாரித்துக்கொண்ட ராமாத்தாள்,  திருடன் வந்த பைக்கை தப்பிக்க விடாமல் இழுத்து தள்ளினார். இதில் நிலை தடுமாறிய திருடன் கீழே விழுந்தான். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், திருடனை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த திருடன் நல்லாம்பாளையத்தை சேர்ந்த காளியப்பன் மகன் தனபால் (20) என்பதும், பி.காம் படித்து விட்டு ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை செய்வதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு: யூ டியூபில் பெண்களிடம் நடக்கும் செயின் பறிப்பு சம்பவத்தில் இருந்து எப்படி தப்புவது? என்ற வீடியோக்களை பார்த்தேன்.

பெண்களிடம் செயின் பறித்தால் எளிதில் பணக்காரன் ஆகி விடலாம் என நினைத்தேன். அதை முதல் முறையாக செயல்படுத்த முடிவு செய்து முல்லை நகர் பகுதியில் தனியாக வரும் பெண்ணுக்காக காத்திருந்தேன்.

அங்கு வந்த ராமாத்தாளின் கழுத்தில் தங்க செயின் கிடப்பதை பார்த்து யூ டியூபில் பார்த்ததுபோல சின்னக்கல்லை எடுத்து அவர் மீது வீசினேன். வீடியோவில் வந்தது போலவே அவர் திரும்பி பார்த்தார். அப்போது நகையை பறிக்க முயன்றேன். மூதாட்டி தள்ளி விட்டதால் மாட்டிக் கொண்ேடன். இவ்வாறு தனபால் கூறினார்.

மூதாட்டிக்கு எஸ்பி பாராட்டு

நகை பறிக்க முயன்ற வாலிபரை தைரியமாக போராடி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டி ராமாத்தாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டி சான்று வழங்கினார்.

Related Stories:

>