கொரோனா தாக்கம் எதிரொலி!: ஏப்.24 முதல் 30ம் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையே விமான சேவைகள் ரத்து..ஏர் இந்தியா அறிவிப்பு..!!

டெல்லி: இந்தியா, பிரிட்டன் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏப்ரல் 24 முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு இயக்கப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பிரிட்டன் நாட்டவர் இந்தியா செல்ல வேண்டாம் என ஏற்கனவே பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது.

மேலும் பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் அந்நாட்டு அரசு இந்தியாவையும் சேர்த்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா தீநுண்மியால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களும், பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வருகின்ற 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு கட்டணங்களை திரும்ப தருவது மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Related Stories: