நெல்லையில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேர், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு தொற்று உறுதி..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகே உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்கள் 164 பேருக்கும், அதேபகுதியில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 132 பேருக்கும் இதேபோல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 99 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நெல்லை மாவட்டத்தில் 2,381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லையில் இதுவரை 225 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் சராசரியாக தினசரி பாதிப்பு என்பது 100 பேர் என்ற அளவில் இருந்த நிலையில், இன்று ஒரேநாளில் 452 பேர் என உச்சத்தை எட்டியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி ஆகிய பகுதிகளில் வடநாட்டு தொழிலாளர்கள் சுமார் 15,000 பேர் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

அவர்கள் மூலமாகவே இந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நெல்லை நாடாளுமன்ற எம்.பி. ஞானதிரவியம், நேற்று முன்தினம் இது சம்பந்தமாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கைவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.

Related Stories: