மராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.1,500 நிதி உதவி : முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு!!

மும்பை: மராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.107 கோடி நிவாரணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் 2-வது அலை மாநிலத்தை சிதறடித்து உள்ளது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருமாறு அரசு உத்தரவிட்டது.இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.107 கோடி நிவாரணம் வழங்க மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 7 லட்சத்து 15 ஆயிரம் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.1500 நிவாரண உதவி கிடைக்கும். இந்த பணம் ஓட்டுனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரூ.1500 நிதித்தொகை போதாது என்று கூறியும் ஒவ்வொருக்கும் தலா ரூ. 5000 வழங்க வேண்டும் என்றும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளது. 

Related Stories:

>