உ.பி.யில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு!: ஆக்சிஜன் நிரப்பும் மையங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கொரோனா காரணமாக சுமார் 49 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் சிலிண்டர்களுடன் செல்வது அதிகரித்து வருகிறது.

சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அதில் ஆக்சிஜனை நிரப்பி செல்கின்றனர். வழக்கமாக இதுபோன்ற மையங்களில் இருந்து மருத்துவமனைக்கு மட்டுமே ஆக்சிஜன் விநியோகம் நடைபெறும். ஆனால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காத சூழலில் மக்களுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பல மையங்களில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே லக்னோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவர், உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கக்கோரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கார் முன் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் படுக்கைத்தர மறுப்பதாகவும் உடனடியாக தனது தாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த இளைஞர் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து அந்த இளைஞரை சமாதானப்படுத்திய மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி சஞ்சய் பட்னாகர், அவரது தாயாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தார்.

Related Stories:

>