தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு விதிக்கும்  கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று மத தலைவர்கள் அரசிடம் உறுதி அளித்தனர். தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மத தலைவர்களுடன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, அறநிலைய துறை செயலாளர் விக்ரம் கபூர்,சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள் சார்பில் சுகதேவானந்தா (ராமகிருஷ்ணா மிஷன், செயலாளர்), மீனாட்சி சுந்தரம் (தர்மபுர ஆதீன மடாலயம்), சலாவுதீப் முகமது ஆயுப் (தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி), குலாம் முகமத் மகத்கான் (தமிழ்நாடு ஜியா முஸ்லிம் தலைமை காஜி), அபுபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்), பால் வில்லியம்ஸ் (சிஎஸ்ஐ சென்னை டயோசிஸ், துணை தலைவர்), ஜார்ஜ் அந்தோணிசாமி (ஆர்ச் பிஷப் ஆப் மெட்ராஸ்), பிரம்மகுமாரி இயக்க தலைவர் ஜான்சி, பல்தீர்சிங் (குருநானக் சங்சங்க் சபா) உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள், ‘‘அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்தழைப்பு வழங்குவோம்” என்று அரசுக்கு உறுதி அளித்தனர்.  முஸ்லிம் மத தலைவர்கள் கூறும்போது, ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை வருகிற ஞாயிற்றுக்கிழமை வருவதால் இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோன்று கிறிஸ்தவ மத தலைவர்கள், ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்த காலையில் ஒரு மணி நேரம் அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். மத தலைவர்களிடம் நடத்திய ஆலோசனையின்படி தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு ஏற்ப சில தளர்வுகளை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: