×

ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு ரூ.48 லட்சம் மோசடி வழக்கில் மாமியார், மருமகன் கைது: பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (58). இவரது மகன் சாந்தகுமார் (32), மகள்கள் தனலட்சுமி (25), மோகனா தேவி (40), மலர்கொடி (30), மருமகன் ரவி (35). இவர்கள் அனைவரும் கூட்டாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், இந்த ஏலச்சீட்டில் சேர்ந்து மாதம் ரூ.2000 கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஏலச்சீட்டு தொகை ரூ.47 லட்சத்துடன் 6 பேரும் மாயமாகினர். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரி, அவரது மருமகன் ரவி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

தகவலறிந்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, ‘எங்களுடைய பணத்தை பெற்று கொடுங்கள், அதுவரையில் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்,’ என்றனர். அதற்கு போலீசார், ‘நிச்சயமாக உங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறோம்’ என்று கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, ராஜேஸ்வரி, ரவி ஆகிய இருவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறவாக உள்ள ராஜேஸ்வரியின் மகன் மற்றும் மகள்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Mother-in-law, son-in-law arrested in Rs 48 lakh fraud case: Victims besiege police station
× RELATED அமைச்சர் சம்பத் சொத்து மதிப்பு 48...