×

நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ம் ஆண்டு முதல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், மண்டல கணக்காளர்கள் தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் நெடுஞ்சாலை துறை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு போல, விடைத்தாள் மாற்றம் செய்து முறைகேடு மூலம் தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மண்டல கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் அளவிற்கான லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. எனவே, இந்த தேர்வு குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தலைமை கணக்காளர் சார்பில் ஆஜரான வக்கீல், தலைமை கணக்காளர் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக மெமோ அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Zonal Accountants ,Highways Department ,ICC , What action has been taken against those who erred in the selection for the post of Zonal Accountants in the Highways Department? ICC order for government to respond
× RELATED அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு