ஒரு வாரம் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழில் அதிபரை சித்ரவதை செய்து சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ்: இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி விசாரணை; சினிமாவை மிஞ்சும் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: சென்னை தொழில் அதிபரை கடத்திச் சென்று பண்ணை வீட்டில் ஒரு வாரமாக அடைத்து வைத்து சொத்துக்களை போலீஸ் அதிகாரிகள் எழுதி வாங்கிய அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சென்னை அயப்பாக்கம் 5வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ். கம்ப்யூட்டர், செக்யூரிட்டி நிறுவனம் உள்பட பல தொழில்களை செய்து வந்தார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை அயப்பாக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அப்போது தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசனிடம், நான் கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்க இருப்பதை தெரிவித்தேன். அவரும், தான் சாய் சாப்டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். உங்கள் நிறுவனத்துக்கு, எங்கள் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் தர ரூ.10 லட்சம் டெபாசிட் தர வேண்டும் என்றார். நானும் அந்தப் பணத்தை கட்டினேன். ரூ.5 லட்சத்தில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினேன். என் நிறுவனத்தில் 25 பேர் வேலை செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் நாங்கள் செய்த வேலைக்காக வெங்கடேஷ், ரூ.25 லட்சம் கொடுப்பார். 2015 ஆண்டுக்கு பின்னர் சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, நான் ரூ.5.5 கோடி கடன் வாங்கி சம்பளம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் கடன் பிரச்னையால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால் வெங்கடேசன் ரூ.5.5 கோடியை கொடுத்தார். வங்கியில் நான் வாங்கிய கடன்போக மீதம் உள்ள பணத்தில், பல இடங்களில் சொத்து வாங்கினேன். வெங்கடேஷிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியிருந்தேன். அதை கொடுக்க முடியாததால், வெங்கடேஷிடம் நான் வாங்கிய பணத்துக்கு பதிலாக விருகம்பாக்கத்தில் உள்ள என்னுடைய செக்யூரிட்டி கம்பெனியை கொடுத்துவிட்டேன்.  

இந்தநிலையில், 2018 ஜூன் மாதம் எனக்கு ஒரு போன் வந்தது. அதில், சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், வெங்கடேஷ், சிவா என்பவரிடம் ரூ.20 கோடி ஏமாற்றி விட்டதாகவும் கூறினார். வெங்கடேஷ் உங்களுக்கு அதிக அளவில் பணம் தந்துள்ளார். அந்தப் பணத்தை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார். சிபிஐ அலுவலக முகவரி கேட்டதும், போனை துண்டித்து விட்டார். 2019ம் ஆண்டு மே மாதம் சில போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி திருமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், என்னை மிரட்டி சொத்து விவரங்களை கேட்டார். நானும் கூறினேன். அங்கு வெங்கடேசுக்கு தெரிந்த சிவா, கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் 2 போலீசாரை என் வீட்டுக்கு அனுப்பினர். அவர்கள் என் அம்மாவை மிரட்டி என்னுடைய சொத்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல்நிலையம் வந்தனர்.

பின்னர் 2 சொத்துக்களை சிவா பெயரில் எழுதிக் கொடுக்கும்படி கூறினர். சிவாவிடம் நான் பணம் வாங்கவில்லை. அவருக்கு ஏன் எழுதித் தரவேண்டும் என்றபோது என்னை என் அம்மா முன்னிலையில் போலீசார் தாக்கினர். இதைப் பார்த்த என்னுடைய அம்மா, எழுதிக் கொடுப்பதாக உறுதியளித்தார். இதனால் போலீசார் எங்களை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். நாளை சார் பதிவாளர் அலுவலகம் சென்று எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் சிவா, கோடம்பாக்கம் ஸ்ரீ, 2 போலீசார் என்னை வலுக்கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்றனர். அங்கு வக்கீல்கள் சிலர் இருந்தனர். அப்போது அண்ணாநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் சில வக்கீல்கள் அங்கு வந்தனர்.

நீங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறி என்னை அண்ணாநகர் காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் நடந்த விவரங்களை எழுதி வாங்கி விட்டு அனுப்பி விட்டனர். பின்னர் ஒரு மாதம் கழித்து திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் மீண்டும் போன் செய்து, 2 சொத்துக்களையும் சிவா பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் சிவாவுக்கு பவர் எழுதிக் கொடுத்தேன். பின்னர் செப்டம்பர் மாதம் நான் திருமணம் செய்ய உள்ள பெண்ணுடன், இங்கு இருந்தால் நம்மை வாழ விட மாட்டார்கள் கோவை சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று கோவை சென்று ஓட்டலில் தங்கியிருந்தோம். 2019 அக்டோபர் 2ம் தேதி அதிகாலையில் சென்னை திருமங்கலம் எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையில் வந்த போலீசார் என்னை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர்.

என் வருங்கால மனைவியையும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் அடுத்த நாள் என் அம்மா, வருங்கால மனைவியின் தம்பி ஆகியோரையும் அழைத்து வந்து அடைத்து வைத்தனர். அங்கு திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார் அங்கு வந்தார். வெங்கடேஷ், உனக்கு ரூ.7.5 கோடி கொடுத்துள்ளார். அதை என்ன செய்தாய் என்று கேட்டு மிரட்டினார். நான் ரூ.5.5 கோடியை எனக்கு சம்பளமாக கொடுத்தார். ரூ.2 கோடி கடன் வாங்கினேன். அதற்கு பதில் என் நிறுவனத்தை அவருக்கு விற்பனை செய்து விட்டேன். எனக்கும் சிவாவுக்கும் சம்பந்தம் இல்லை. என்னை ஏன் மிரட்டுகின்றீர்கள் என்றேன். அப்போது எஸ்.ஐ. பாண்டியராஜன் என்னை அடித்து, உதைத்தார். பின்னர் என் அம்மாவுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்தனர்.

எனக்கு ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொடுத்தனர். என்னை மட்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, சொத்து ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். பின்னர் சொத்தை எழுதித் தரும்படி ஒரு வாரம் பண்ணை வீட்டில் வைத்து அடித்து, உதைத்தனர். என் வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வோம் என்று மிரட்டினர். அவர்களது மிரட்டல் மற்றும் அடி தாங்க முடியாமல், அவர் சொன்னபடி திருள்ளூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் தருண் கிருஷ்ணபிரசாத் என்பவருக்கு என் சொத்துக்களை எழுதிக் கொடுத்தேன். பின்னர் எனக்கு ராஜேஷ் என்பவர் ரூ.1.25 கோடி தரவேண்டும். இது தெரிந்ததால், போலீஸ் நிலையத்திற்கு ராஜேஷை அழைத்த வந்திருந்தனர்.

அங்கு என்னையும் அழைத்துச் சென்று, இனிமேல் ராஜேசுக்கு பணம் கொடுக்க வேண்டாம். சிவாவுக்கு ரூ.1.25 கோடியை கொடுக்க வேண்டும். நீ அவரிடம் கடன் வாங்கியதுபோல எழுதிக் கொடு என்று மிரட்டினர். அவரும் எழுதிக் கொடுத்தார். பின்னர் மீண்டும் பண்ணை வீட்டில் என்னை அடைத்து வைத்தனர். பின்னர் என்னுடைய பழைய செக்யூரிட்டி கம்பெனிக்கு அழைத்துச் சென்று 100 பேப்பரில் எழுதி வாங்கினர். லேப்டாப், கேமரா, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் என் சொத்துக்களை எழுதி வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.இந்தப் புகாரைத் தொடர்ந்து, உதவி கமிஷனர் சிவக்குமார் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இந்தப் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஜிபி திரிபாதிக்கு, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டார். போலீஸ் மீதான குற்றச்சாட்டு என்பதால், சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின்பேரில் ஐஜி தேன்மொழி, எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார், புகார் கொடுத்த ராஜேசை, அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர், குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவரிடம் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் ஒரு உயர் அதிகாரி உத்தரவின்பேரில்தான் செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் சென்னை போலீசில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வோம் என்று மிரட்டினர். அவர்களது மிரட்டல் மற்றும் அடி தாங்க முடியாமல், அவர் சொன்னபடி திருள்ளூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் என் சொத்துக்களை எழுதிக் கொடுத்தேன்..

Related Stories: