கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: கைது செய்ய போலீசார் திட்டம்

சென்னை: நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது, நடிகர் விவேக் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதைதொடர்ந்து மறுநாள் திடீரென நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார்.

இதற்கிடையே நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடிகர் மன்சூர் அலிகான் அவரை பார்க்க தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடையே பரவி வருகிறது.

எனவே, மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் சமூக வலைத்தளங்களில் தடுப்பூசி குறித்து தகவல் பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்திருந்தனர். அதேநேரம், கோடம்பாக்கம் மண்டல மாநகராட்சி அதிகாரி பூபேஷ் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி சட்ட நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு போலீசார் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடத்து கொள்ளுதல், பேரிடர் மேலாண்மை சட்டம், 270, 505(1) உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிக்கானை எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: