டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர் விடைத்தாள் நகல் பெறலாம்: இணையதளம் மூலம் பெற புதிய வசதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற்ற குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு, அதே பதவிகளுக்கான 12.7.2019, 13.7.2019 14.7.2019 ஆகிய தினங்களில் நடைபெற்ற முதன்மை தேர்வுக்கான விடைத்தாள்கள் 21ம் தேதி(நேற்று) தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் தேர்வர்களின் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். எனவே, இவ்வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்தேர்வினை எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் ஓடிஆர் கணக்கு மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாள்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குரூப் 1 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய தேர்வு பட்டியல் அவர்களுடைய புகைப்படங்களுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: