×

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியமில்லை,’ என கூறியுள்ள பிரதமர் மோடி, ஊரடங்கை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டுமென மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி, படுக்கை வசதியின்றி, தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை  நடத்தினார்.

பின்னர், இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். அதில், அவர் கூறியதாவது: இந்த நாடு கொரோனாவுக்கு எதிராக மீண்டும் மிகப்பெரிய போரை தொடங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன், வைரஸ் பரவல் குறைந்த நிலையில், தற்போது கொரோனா 2வது அலை தாக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் இழப்பை எனது இழப்பாகவே கருதுகிறேன்.

நம்முன் இருக்கும் இந்த சவால் மிகப்பெரியது. ஆனால், நம் மனஉறுதி, தைரியம் மற்றும் முன்னேற்பாடுகள் மூலம் இதில் வெல்ல முடியும். கொரோனாவுக்கு எதிராக ஓய்வின்றி உழைக்கும் நமது டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் அதை கிடைக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையும் தொடர்ந்து எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பட்டு உள்ளதுடன், அதன் விநியோகமும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவ துறை ஏற்கனவே மருந்துகள் உற்பத்தியை அதிகரித்துள்ளது. உச்சத்தில் உள்ள உற்பத்தி வரும் காலங்களில் அதிகரிக்கப்பட உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில், பெரிய அளவிலான கொரோனா மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா 2 ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகளுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போது வரை, 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் தடுப்பூசி சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமது விஞ்ஞானிகள் வெகு குறுகிய காலத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். அதிலும், உலகிலேயே மிக விலை மலிவான தடுப்பூசியை நாம்  வைத்துள்ளோம். சாத்தியமுள்ள அளவிற்கு பல உயிர்களை காக்கும் அதே வேளையில், பொருளாதாரமும் தொய்வின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இந்தியா கொரோனாவை வீழ்த்தும் என்றே உறுதியாக நம்புகிறேன். அதே சமயம், நாட்டு மக்கள் அனைவரும். தடுப்பூசி போட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நாம் முறையாக பின்பற்றினால், ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம இருக்காது. பொய் புரளிகளை புறக்கணித்து, விழிப்புணர்வை பரப்ப வேண்டும். ஊரடங்கு விதிப்பதில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். ராமநவமி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளை கொண்டாடும் வேளையில், சரியான வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, தங்கள் பகுதியில் கொரோனா நிர்வாகத்திற்கு உதவ வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கட்டுப்பாடுகளோ, ஊரடங்கோ விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஊரடங்கிலிருந்து நாம் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும். ஊரடங்கை கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிறு கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து நோய் பரவலை கட்டுப்படுத்துங்கள். மக்கள் பீதி அடைய வேண்டாம். அமைதி காத்திடுங்கள். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துங்கள். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது. நம் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியின் மூலம் கொரோனா 2வது அலையை வென்றெடுப்போம். மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள், அனைவரும் தடுப்பூசி போடுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* வெளிமாநில தொழிலாளர்கள் இடம் பெயர வேண்டாம்
டெல்லி, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘வெளிமாநில தொழிலாளர்களிடம் மாநில அரசுகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்கச் செய்ய வேண்டும். அடுத்த சில நாட்களில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும், அவர்களுக்கு வேலை திரும்ப கிடைத்து விடும் என மாநில அரசுகள் அவர்களிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்’’ என்றார்.

* அரசின் திட்டம் என்ன? தயாநிதி மாறன் கேள்வி
திமுக எம்பி தயாநிதி மாறன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `பாஜ அரசு, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறி இருப்பது அடுத்த கேலி கூத்தாக உள்ளது. இத்தனை மாதங்களாக அரசு தூங்கி விட்டு, தற்போது மேற்கு வங்க தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை தவறாக வழி நடத்துகிறது. கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையால் நாட்டு மக்கள் மிகவும் பாதித்துள்ளனர். தடுப்பூசிக்கான தேவை, வினியோகத்தை மோடி தலைமையிலான அரசு எப்படி இணைக்க போகிறது? முதலில், அரசின் திட்டம் என்ன என்பதை கூறுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

Tags : PM Modi , No complete curfew needed to curb corona spread: PM Modi
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!