சென்னையில் இன்று மாலை பஞ்சாப் - ஐதராபாத் மோதல்

சென்னை: ஐபிஎல் தொடர் 14வது சீசனின் 14வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், வான்கடே மைதானத்தில் விளையாடிய 3 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை நூலிழையில் வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களிலும் சென்னை, டெல்லி அணிகளிடம் மண்ணைக் கவ்வியது. மும்பை போட்டிகளை முடித்துக் கொண்டு   சென்னை வந்துள்ள பஞ்சாப், இங்கு வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும், வெற்றிகரமாக முடிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது. நடப்புத் தொடரில் அதிக ரன் குவித்த அணியான பஞ்சாப், பந்துவீச்சில் மட்டும் இன்னும் வேகம் பெறவில்லை. ராகுல், மயாங்க், கேல், ஹூடா, தமிழக வீரர் ஷாருக் கான் ஆகியோர் வழக்கம்போல் கலக்கினால், எதிரணிக்கு நெருக்கடி தான். அதே சமயம், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதால்,  முதல் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது.

முதல் 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா, பெங்களூர், மும்பை அணிகளிடம் குறைந்த ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது அணி மீதான நெருக்கடியை அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் அதிரடியாக ரன் குவித்து வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியைத் தழுவுவது ஐதராபாத் அணியின் பலவீனமாக உள்ளது. இதை சரி செய்ய, ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் சிலரை பின் வரிசையில் களமிறக்குவது பற்றி பரிசீலிக்கலாம். கேன் வில்லியம்சன் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாரானால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். பந்துவீச்சு கூட்டணி ஓரளவு சிறப்பாகவே செயல்படுகிறது. எனினும், வெற்றியை வசப்படுத்த ஐதராபாத் வீரர்கள் அனைத்து துறையிலும் ஒருங்கினைந்து சிறப்பாக செயல்படுவது அவசியம். புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகள், முன்னேறும் முனைப்புடன் மோதும் இப்போட்டியில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: