அமித், லலித் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது டெல்லி

சென்னை: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ஆடம் மில்னிக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம் பெற்றார். டெல்லி அணியில் மெரிவாலா, வோக்ஸ் நீக்கப்பட்டு ஹெட்மயர், அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டனர். ரோகித், டி காக் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். டி காக் 2 ரன் மட்டுமே எடுத்து ஸ்டாய்னிஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் இணைந்த சூரியகுமார் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இருவரும் 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 24 ரன் (15 பந்து, 4 பவுண்டரி), ரோகித் 44 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி திடீர் சரிவை சந்தித்தது.

இந்த இரட்டை அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, ஹர்திக் பாண்டியா சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு வெளியேறினார். அடுத்து வந்த க்ருணல் பாண்டியா 1 ரன். கைரன் போலார்டு 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, மும்பை அணி 11.5 ஓவரில் 84 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. 17 ரன்னுக்கு 5 விக்கெட் விழுந்ததால் மும்பை அணியின் ஸ்கோர் வேகம் வெகுவாகக் குறைந்தது. டெல்லி பந்துவீச்சில் லலித் யாதவ், அமித் மிஷ்ரா இருவரும் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில், இஷான் கிஷன் - ஜெயந்த் யாதவ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 39 ரன் சேர்த்தது. இஷான் 26 ரன் எடுத்து (28 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) அமித் சுழலில் கிளீன் போல்டாக, ஜெயந்த் 23 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் அவரிடமே பிடிபட்டார். ராகுல் சாஹர் 6 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. பும்ரா 3 ரன், போல்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி பந்துவீச்சில், அமித் மிஷ்ரா 4 ஓவரில் 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் 2, லலித், ஸ்டாய்னிஸ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி, தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிரித்வி 7 ரன் எடுத்து ஜெயந்த் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். ஸ்டீபன் ஸ்மித் 33 ரன், ரிஷப் பந்த் 7 ரன் எடுத்தனர். டெல்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக தவான் 45 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். லலித் யாதவ் 22 ரன், சிம்ருன் ஹேட்மயர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ஜெயந்த் யாதவ், பும்ரா, ராகுல் சாஹர், போலார்டு  தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Related Stories: