உற்பத்தியை அதிகரிக்க முன்பணமாக தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி: மத்திய அரசின் அறிவிப்பால் சீரம் உற்சாகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட இருப்பதால், உற்பத்தியை அதிகரிக்க முன்பணமாக தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசியை ஆணடுக்கு 70 கோடி டோஸ் தயாரிக்க போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ள. நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகரித்து வருகிறது. இப்பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் பல மையங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 12.71 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கும்போது மேலும் பல கோடி தடுப்பூசி தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, தடுப்பூசி உற்பத்தியை பெருக்க உற்பத்தி நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி தர மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எந்த வங்கி உத்தரவாதமும் இன்றி இந்த நிதி முன்பணமாக வழங்கப்பட உள்ளது. இதில், சீரம் நிறுவனத்திற்கு ரூ.3,000 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியும் வழங்கப்பட உள்ளது.  இதன் மூலம், ஜூலைக்குள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, ஒரு டோஸ் ரூ.150 என்ற விலையில் சீரம் நிறுவனம் 20 கோடி டோஸ், பாரத் பயோடெக் 9 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்கும். முன்னதாக, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.3,000 கோடி நிதி அவசியம் என கூறியிருந்த சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூனாவாலா, மத்திய அரசின் தற்போதைய அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 70 கோடி கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 70 டோஸ் கோவாக்சின் தயாரித்து வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசி தயாரிக்கும் திறனுடன் இருந்த இந்நிறுவனம் ஐதராபாத், பெங்களூருவில் புதிய உற்பத்தி மையங்களை நிறுவியதன் மூலம் 3 மடங்கு அதிக உற்பத்தி திறனை பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி 60 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. 50 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எனவே, இரு நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே இந்தியாவில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>