×

ஈரோடு அருகே மகன்களை நரபலி கொடுக்க முயற்சி பெற்றோர் உட்பட 5 பேர் கைது: பாட்டி புகாரால் நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (43). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ரஞ்சிதா (36). இவர்களுக்கு 15 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் பாட்டி பாக்கியம் (60), கடந்த 13ம் தேதி ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்: எனது மருமகன் ராமலிங்கம், இந்துமதி (32) என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் என் மகள் ரஞ்சிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மூவரும் ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகரில் வசித்து வந்தனர். இவர்களுடன் தனலட்சுமி என்ற சசி (39) என்பவரும் வசிக்கிறார். 4 பேரும் சேர்ந்து எனது பேரன்கள் இருவரையும்  கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இரவு நேரத்தில் சிவன் கடவுளுக்கு பூஜைகள் செய்வதாகவும், அப்போது, சசி என்ற தனலட்சுமி சிவனாகவும்,  மகள் ரஞ்சிதா சக்தியாகவும் இருப்பதாக கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றியும், சிவன், சக்தி வேடம் அணிந்து பூஜைகள் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி இரவு சசி என்ற தனலட்சுமி என் மகள் ரஞ்சிதாவிடம் மகன்களை நரபலி கொடுத்தால் சிவனுடைய சக்தி கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு பயந்துபோய் பேரன்கள் புளியம்பட்டியில் உள்ள எனது வீட்டிற்கு வந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நானும், எனது கணவரும் பேரன்களை அழைத்துக்கொண்டு ஈரோடு வந்து ரஞ்சிதா மற்றும் ராமலிங்கத்திடம் முறையிட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

இதன்பேரில், ஈரோடு தாலுகா போலீசார் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவர்களின் தாய் ரஞ்சிதா (37), தந்தை ராமலிங்கம் என்ற ரமேஷ் (44), 2வது மனைவி இந்துமதி (34), தனலட்சுமி என்ற சசி (38), அடைக்கலம் கொடுத்த சேலம் மாவட்டம் இடைப்பாடி இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன் (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, ஈரோடு ஜெ.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 கார்களையும், சிவன் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.Tags : Erode , 5 arrested for attempting to sacrifice sons near Erode: Grandmother complains
× RELATED தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை...