மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்நவிசின் 23 வயது மருமகனுக்கு தடுப்பூசி போட்டதால் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவசின் 23 வயது மருமகனுக்கு விதிமுறைகளை மீறி 2 முறை கொரோனா தடுப்பூசி மருந்து போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தற்போது சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கும் மே 1ம் தேதியில் இருந்து போடப்பட உள்ளது. இந்நிலையில், தனக்கு 2 முறையும் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக, மகாராஷ்டிரா பாஜ மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்நவிசின் மருமகன் தன்மே பட்நவிஸ் தனது இன்ஸ்டாகிராமில் படத்துடன் செய்தி வெளியிட்டார். அவருக்கு வயது 23 மட்டுமே.

இதனால், இந்த விதிமுறை மீறல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ‘பாஜ தலைவர்களின் குடும்பத்தினரின் உயிர் மட்டும்தான் முக்கியம்தான். மற்றவர்களின் உயிர் கிள்ளுக்கீரையா?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் மக்களும் இதை கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகின்றனர். இது பற்றி நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தின் இயக்குனர் ஷைலேஷ் ஜோக்லேக்கர் கூறுகையில், ‘‘தன்மே பட்னவிஸ் முதல் டோஸ் தடுப்பூசியை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், 2வது தடுப்பூசியை எங்கள் மையத்தில் போட்டோம். முதல் தடுப்பூசி எந்த அடிப்படையில் அவருக்கு போடப்பட்டது என்று தெரியாது,’’ என்றார். ஆனால், தனது மருமகனுக்கு தடுப்பூசி போடப்பட்டதே தெரியாது என்று தேவேந்திர பட்நவிஸ் நழுவி உள்ளார்.

Related Stories:

>