ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை யானைஅட்டகாசம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ஒற்றை யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பாலூர், மாச்சம்பட்டு, ரெட்டி கிணறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டுகின்றனர். ஆனால் இந்த யானை மாற்று வழியாக மீண்டும் ரெட்டி கிணறு பகுதிக்கு திரும்பியது.

தற்போது மாச்சம்பட்டு பகுதியில் உள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று பாலூரை சேர்ந்த துளசிராமன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த யானை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. அதேபோல் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் நடப்பட்டிருந்த கருங்கற்களை உடைத்து தள்ளியது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாலூர், சாரங்கல், பைரப்பல்லி, சுட்டகொண்டா, மாச்சம்பட்டு மற்றும் கொத்தூர் பகுதிகளையே ஒற்றையானை சுற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒற்றை யானையால் பயிர்கள் சேதமாவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>