இன்று இரவு ஊரடங்கு அமல் குமரியில் பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு தொலைதூர பஸ்கள் காலை 5 மணிக்கு புறப்பட்டன

நாகர்கோவில்: குமரியில் இருந்து வழக்கமாக இரவு நேரங்களில் தொலை தூர பகுதிகளுக்கு இயக்கப்படும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் போக்குவரத்து கழக பஸ்கள் இன்று காலை 5 மணியில் இருந்து இயக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து வழக்கமாக சென்னை, கோவை, சேலம், பெங்களூர், திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும்.

நாள் ஒன்றுக்கு சுமார் 80 பஸ்கள் இயங்கும். மதியம் 3 மணியில் இருந்து விரைவு பஸ்கள் இயங்க தொடங்கும். ஆனால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்பதால், நாகர்கோவிலில் இருந்து தொலை தூர இடங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.  மாலை மற்றும் இரவில் செல்ல வேண்டிய பஸ்கள், காலை 5 மணியில் இருந்து காலை 8 மணிக்குள் புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. 80 பஸ்கள் செல்லும் நிலையில், 20 விரைவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

சென்னைக்கு 6 பஸ்களும், வேலூர் 3 பஸ்கள், வேளாங்கண்ணிக்கு 3 பஸ்கள், பெங்களூர் 2, கோவை 2, ஈரோடு, பாண்டிச்சேரிக்கு தலா 1, சேலம், திருச்சிக்கு தலா 2 பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களிலும் கூட்டம் இல்லை. பயணிகள் முக கவசம் அணிந்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். சானிடைசரும் வழங்கி கைகளை சுத்தம் செய்த பின், அனுமதிக்கப்பட்டனர்.  இதே போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் பஸ்களின் எண்ணிக்கை இன்று குறைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 750 பஸ்கள் இயங்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்கு பின் தான் போக்குவரத்து தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 600 பஸ்கள் தான் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு நேர ஊரடங்கையொட்டி பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனால் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயங்கின. 400 பஸ்கள் தான் மொத்தமாக இயக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு, 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குகின்றன. இதில் 7 பஸ்கள், ஏ.சி. பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் இன்று முழுமையாக இயங்கின. மதுரை, திருச்சிக்கு செல்ல வேண்டிய பஸ்கள் குறைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு பின் மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று அதிகாரிகள் கூறினர்.

மாலை 5 மணிக்கு மதுரைக்கு செல்லும் பஸ், நாளை காலை தான் மதுரையில் இருந்து புறப்பட்டு வரும். வேளாங்கண்ணி, திருச்சி, கோவை, சேலத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் மாலை வேளையில் பஸ்கள் செல்லும். இந்த பஸ்கள் இன்று காலை 5 மணி முதல் காலை 8 மணிக்குள் செல்லும் வகையில் இயக்கப்பட்டன.  இன்று இரவு 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து  திருச்செந்தூர் புறப்படும் பஸ் திருச்செந்தூரில் இரவு நேரம் நிறுத்தப்பட்டு  மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களும் இரவு 8  மணியுடன் நிறுத்தப்படுகிறது. ஸ்டே பஸ்கள் அனைத்தும் இரவு 8.30 மணிக்கு பஸ்  நிலையங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இரவு 10 மணிக்குள் அனைத்து பஸ்களும் டெப்போவுக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: