ஊரடங்கு கட்டுப்பாடு எதிரொலி: ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை கடும் பாதிப்பு

ஈரோடு: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு எதிரொலியாக ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஈரோட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த வாரம் முதல் இரவு நேர சந்தைக்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து, பகல் நேரத்தில் மட்டுமே சந்தை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதானல், ஈரோட்டில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வியாபாரிகள் வருகை இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிறிய வியாபாரிகள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு ஜவுளிச்சந்தை நிர்வாகி நூர்சேட் கூறியதாவது: ஜவுளி வியாபாரிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் ஜவுளிகளை கொள்முதல் செய்ய வருவார்கள். வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சந்தை கூடும் முந்தைய நாள் அல்லது சந்தை கூடும் நாளில் பகலில் புறப்பட்டு வந்து இரவில் ஜவுளிகளை கொள்முதல் செய்வார்கள்.

இதனால் அவர்களது விற்பனை பாதிக்கப்படாது. தற்போது பகலில் மட்டும் சந்தை கூடும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால், வியாபாரிகள் சந்தைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடிவதில்லை. மேலும், தமிழகத்தில் இரவு ஊரடங்கு, இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் பகலில் நடக்கும் சந்தைக்கு அதிகாலை புறப்பட்டு வந்து, சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு ஜவுளிகளுடன் செல்வது இயலாத காரியம். இதன்காரணமாக இந்த வாரம் கூடிய சந்தையில் பெரும்பாலான வியாபாரிகள் கடை அமைக்கவில்லை.

வெளிமாநில வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகள் வருகையும் இல்லை. இதனால் இந்த வாரம் ஜவுளி சந்தை விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளாடைகள் உள்ளிடவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள் வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால், அவர்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய வியாபாரிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்த ஜவுளி ரகங்களும் தேக்கம் அடைந்துள்ளது. இவ்வாறு நூர்சேட் கூறினார்.

Related Stories: