கொரோனா 2வது பரவலை தடுக்க திருச்செந்தூர் கடற்கரை இன்று முதல் மூடல்: பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டும் அனுமதி

திருச்செந்தூர்: கொரோனா 2வது பரவலை தடுக்க திருச்செந்தூர் கடற்கரை இன்று முதல் மூடப்பட்டது. யாரும் நுழைய முடியாதவாறு தடுப்பு அரண்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றுமுன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் இன்று (20ம்தேதி) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும், அனைத்து நாட்களும் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதல் திருச்செந்தூர் கடற்கரை பயணிகள் குளிக்க முடியாதவாறு மூடப்பட்டிருந்தது.

போலீசார் கடற்கரை நுழைவு வாயில்களில் தடுப்பு அரண்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் நடமாட்டமின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. நாழிக்கிணறில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதிகாலை 6 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தனர்.

அர்ச்சனை செய்யவும், அபிசேகம் நடத்தவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வருகிற 25ம்தேதி (ஞாயிறு) அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்று பக்தர்கள் கோயிலுக்கு வர  தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று அனுமதிக்கப்பட்டாலும் கோயிலில் கூட்டம் இல்லை. சொற்ப அளவிலான பக்தர்களை வந்திருந்தனர்.

அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூர் கடற்கரை மூடப்பட்டாலும் அய்யா கோயில் கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக நின்று கடலில் குளித்து மகிழ்ந்தனர். போலீசில் கேட்டதற்கு, போதிய படை பலம் இல்லாததால் அங்கு பாதுகாப்பு போட முடியவில்லை என்றும், அதை சாதகமாகக் கொண்டு பக்தர்கள் அய்யா கோயில் கடலில் குளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories:

>