அணைக்கட்டு அருகே ரூ.1.87 லட்சம் ஒதுக்கியும் மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் வல்லண்டராமம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தெருவிளக்கு அமைக்க மின்கம்பங்கள் இல்லாததால் இருளில் மூழ்கி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின்படி 2012-2013 நிதி ஆண்டில் தாய் திட்டத்தில் வல்லண்டராமம் முதல் பொற்கொடியம்மன் ஏரிக்கோயில் அருகே உள்ள காளிவெட்டிபட்டி வரை உள்ள கிராமங்களில் சாலை ஓரத்தில் 26 தெரு மின் விளக்குகள் அமைக்க ரூ.1 லட்சத்து 87ஆயிரத்து 950 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த ஆண்டிலேயே விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பணமும் செலுத்தப்பட்டதாம்.

இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து மின் கம்பங்களை புதிதாக நட்டு மின் இணைப்புகளை வழங்கினர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் இறுதியாக காளிவெட்டிபட்டி கிராமத்தில் சாலை ஓரத்தில் மூன்று மின்கம்பங்களை நட வேண்டிய நிலையில், இரண்டு மின்கம்பங்களை மட்டும் நட்டுவிட்டு 3வது மின்கம்பத்தை மின்வாரியத்தினர் நடவில்லையாம். மேலும் அந்த இரண்டு மின்கம்பத்தில் மின்கம்பிகளை இணைக்கவில்லை.

தற்போது அந்த 2 கம்பங்களும் எவ்வித, ஸ்டே கம்பிகளின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. 3வது மின்கம்பத்தை நட்டு மின் இணைப்புகளை கொடுக்காததால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்கம்பத்திலேயே வீட்டு மின் இணைப்புகளை எடுத்துள்ளனர். நடப்படாத மின்கம்பத்தை நட்டு மின் கம்பிகளை இணைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பல முறை விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில்கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதை கேட்டபோது ஆட்கள் பற்றாகுறை உள்ளது என கூறி இத்தனை ஆண்டுகளாக தட்டிக்கழித்து வந்துள்ளனர். எனவே மின்வாரியத்தினர் இனியாவது புதிய மின்கம்பத்தை நட்டு, மூன்று கம்பங்களிலும் மின் இணைப்பு வழங்கி, இருள் சூழந்து கிடக்கும் இந்த சாலையில் வெளிச்சத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>