மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வேக்சின்: தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...!!!

புதுடெல்லி:  மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதால், தடுப்பூசி கொள்முதல் செய்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  ஸ்புட்னிக் - 5, ஃபைசர், மாடர்னா, ஜான்சன் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி திட்டம்  தொடங்கப்பட்டு, தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் 3வது தடுப்பூசி திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுதவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு  தடுப்பூசி மற்றுமின்றி வெளிநாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசால் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றுமல்லாது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சப்ளை செய்யப்படும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.  தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவை சேர்ந்த மூத்த மருத்துவ  நிபுணர்கள் மற்றும் மருந்துத் துறையின் பிரதிநிதிகள், மத்திய அரசின் கோவிட் கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உலகளவில் பல நாடுகளுக்கும் சப்ளை செய்யப்படும் தடுப்பூசிகளான ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்றவையும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளன. அமெரிக்கா  போன்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை எவ்வித ஒப்புதலுமின்றி நேரடியாக மக்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: