தமிழகத்தில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு; வீணாவதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை... சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.!!!

சென்னை: தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து  மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசிடம்,  தமிழக அரசு சார்பில் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் கடந்த 18-ம் தேதி ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம்  தடுப்பூசிகள் தமிழகம் வந்தது. தொடர்ந்து, இன்று 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.

இந்நிலையில், தடுப்பூசிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், தமிழகத்துக்கு இன்று 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசின் கிடங்கிலிருந்து பெறப்பட்டு உள்ளது.  கடந்த 18-ம் தேதி ஒரு லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன. இன்று வந்துள்ள 6 லட்சம் தடுப்பூசிகளுடன்  சேர்த்து தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

குளிர்சாதன வாகனம் மூலம் டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.  பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தடையின்றி மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்து வரும்  வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றார். தடுப்பூசிகள் வீணாவதை பெரிதுபடுத்த  வேண்டியதில்லை. தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மே-1ம் தேதிக்கு பின்னர் 18  வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன்மூலம் தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்கு இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 வந்துள்ளது. கோவாக்சின் 8 லட்சத்து 82 ஆயிரத்து  130 வந்துள்ளது. மேலும் ஒரு லட்சம் கோவாக்சின் வந்துள்ளது. கோவிஷீல்டு முதல் டோஸ் இதுவரை 41 லட்சத்து 21 ஆயிரத்து  783 பேருக்கு போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு 2வது டோஸ் 6 லட்சத்து 85 ஆயிரத்து 360 பேர் எடுத்து கொண்டுள்ளனர்.  கோவாக்சின் 1 லட்சத்து 49 ஆயிரத்து 30 டோஸ் இருப்பில் உள்ளது. மேலும் 5 லட்சம் கோவாக்சின் விரைவில் வரும் என்று  தகவல் வந்துள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை. நாளொன்றுக்கு 240 டன் ஆக்ஸிஜன்  வழங்கும் வகையில் வலுவான கட்டமைப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 34,000 படுக்கை வசதிகளும், சென்னையில் 10,000 படுக்கை  வசதிகளும் உள்ளன என்றும் கூறினார்.

Related Stories:

>