45 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சாம்கரனின் பந்துவீச்சு அற்புதம்...கேப்டன் டோனி பாராட்டு

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்களில் டூ பிளெஸ்சி, 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ராயுடு 27 ரன்கள், மொயின் அலி 26 ரன்கள், பிராவோ 20 ரன்கள், டோனி 18 ரன்கள் மற்றும் ரெய்னா 18 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 188 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பவுலர் சேட்டன் சகாரியா, 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணியின் ஓபனர்களில் ஜாஸ் பட்லர் பொறுப்பாக ஆடி 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். வோரா 14 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், சிவம் துபே 17 ரன்களிலும் என அடுத்தடுத்து ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் 14.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் என ராஜஸ்தான் தடுமாறியது. டிவாட்டியாவும், உனட்கட்டும் சற்று பொறுப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை எளிதான வெற்றியை பெற்றது. 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், ‘‘சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போட்டியில் அது நிறைவேறியிருக்கிறது. துவக்க ஓவர்களில் சாம் கரனின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. தீபக் சஹாரும் கை கொடுத்தார். வழக்கத்தை விட பனிப்பொழிவு குறைவாக இருந்தது. அதனால் பவுலர்களின் சிரமம் சற்று குறைந்தது என்று நினைக்கிறேன்.

24 வயதில் ஆடியது போல, நான் இப்போது சிறப்பாக ஆடுவேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. அதே சமயம் இப்போது என்னுடைய 40வது வயதில் மக்கள் என்னை நோக்கி விரலை நீட்டி குற்றம் சொல்லக் கூடாது. அதற்கேற்றவாறு ஆட வேண்டும் என்பது என் விருப்பம். இளம் வீரர்கள் துடிப்புடன் உள்ளார்கள். அவர்களுடன் இணைந்து என்னாலும் ஈடு கொடுக்க முடிகிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘‘எங்கள் அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. குறிப்பாக சகாரியா நன்றாக பந்துவீசினார். ஆனால் 2வது இன்னிங்சில் பனிப்பொழிவு இல்லாதது ஏமாற்றம்தான். இது சென்னை பவுலர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் எங்கள் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தோல்விக்கு இதுதான் காரணம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: