ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது; இந்த மாசடைவதை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை விரிவான பதில்மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் நதிகள் மாசடைவது குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மாசடைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

நதிகளில் தொழிற்சாலைகள், கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் வெளியேற்றுவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்றதாகி விடுகிறது. ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. கடைமடை பகுதி மக்களுக்கும் தூய்மையான நீர் சென்றடைய வேண்டும். மேலும் கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசி காரில் செல்லும்போது கூட, துர்நாற்றம் வீசுவதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: