மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்-திசையன்விளை அருகே பரபரப்பு

திசையன்விளை : திசையன்விளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மின் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த ரம்மதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி திலகராணி. இவர்களது மகள் செல்வம் எப்சிபா (9). அங்குள்ள புனித சவேரியார் துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த சிறுமி, நேற்று முன்தினம் மதியம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வரும் வழியில் அங்குள்ள மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து சிறுமியின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். இதனால் பதறிய பெற்றோர், சிறுமியை மீட்டு  திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினார்.

 இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த திசையன்விளை போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமியின் தாய் திலகராணி கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி விசாரணை நடத்தினார். ஆனால், ஏற்கனவே அறுந்து விழுந்த மின்கம்பியை சிறுமி மிதித்ததாலேயே அவர் உயிரிழந்ததாக எப்ஐஆரில் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இதனால் ஆவேசமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்ட சம்பந்தப்பட்ட மின் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தி திசையன்விளை காவல்நிலையத்தை  நேற்று முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து உவரி இன்ஸ்பெக்டர் செல்வி, சமரசப்படுத்தினார்.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்டோர்  மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: