காரிமங்கலம் சந்தையில் தேங்காய் விற்பனை மந்தம்-விவசாயிகள் வேதனை

காரிமங்கலம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை மந்தமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடந்து வருகிறது. இதில் காரிமங்கலம், பாலக்கோடு, பண்ணந்தூர், நாகரசம்பட்டி, புலியூர், அரசம்பட்டி, அகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் தேங்காயை வாங்கி செல்கின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அளவை பொறுத்து, ₹7 முதல் ₹16 வரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ள நிலையில், கொரோனோ பரவல் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக, தேங்காய் விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: