வேலூர் முள்ளிப்பாளையத்தில் வெறிச்சோடிய தற்காலிக காய்கறி கடைகள்-வாடிக்கையாளர்களின்றி வியாபாரிகள் வேதனை

வேலூர் : வேலூர் முள்ளிப்பாளையத்தில் நேற்று தொடங்கிய தற்காலிக சில்லரை காய்கறி மார்க்கெட் வாடிக்கையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடியது.கொரோனா 2வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், காய்கறி, பூ மார்க்கெட்டுகளுக்கும் கடந்த ஆண்டை போன்று சிறப்பு ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்தது. அதன்படி வேலூர் முள்ளிப்பாளயைம் மாங்காய் மண்டி அருகில் வேலூர் நேதாஜி மார்க்கெட் சில்லறை காய்கறி வியாபாரிகள் 120 பேருக்கு 90 ஷெட்கள் அமைக்கப்பட்டன.

அதேபோல் சில்லறை பூ வியாபாரிகளுக்காக வேலூர் ஊரிசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பள்ளி மைதானத்திலும், டவுன் ஹால் வளாகத்திலும் தற்காலிக ஷெட்கள் அமைக்கப்பட்டன. அதேநேரத்தில் நேதாஜி மார்க்கெட்டில் பூ, காய்கறி மொத்த வியாபாரிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த ஏற்பாடு நேற்று முன்தினம் இரவு முதலே நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், வேலூர் முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி அருகில் நேற்று காலை 6 மணியளவில் வெறும் 20 சில்லரை வியாபாரிகள் மட்டுமே காய்கறி கடைகளை அமைத்திருந்தனர். அவர்கள் காலை 9 மணி வரை வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். யாரும் காய்கறி வாங்க வராததால் அவர்கள் கடைகளை மூடிவிட்டு நடையை கட்டினர்.

அதேபோல் சில்லரை பூ வியாபாரிகள் நேற்று அதிகாலை கடைகளை திறக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரிசு பள்ளி மைதானம் காலை வியாபாரிகள் இன்றி திறக்கப்படவே இல்லை. அதேபோல் டவுன் ஹால் வளாகத்துக்கும் வியாபாரிகள் யாரும் வரவில்லை.

இதுதொடர்பாக நேதாஜி மார்க்கெட் சில்லரை காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்பேரில் முள்ளிப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக மார்க்கெட்டுக்கு வெறும் 20 பேர் மட்டுமே வந்தோம்.

ஆனால் காய்கறி வாங்க ஒருவர் கூட வரவில்லை. காய்கறி விலைகள் மிகவும் சரிந்துள்ள நிலையில் நகரின் எல்லா தெருக்களிலும் நடமாடும் காய்கறி வியாபாரிகளும், லோக்கல் சில்லரை வியாபாரிகளும் கடைகளை போட்டுள்ளதாலும், நகருக்கு வெளியில் இந்த மார்க்கெட் அமைந்துள்ளதாலும் வாடிக்கையாளர்கள் வரவில்லை.

அதேபோல் இரவு நேர ஊரடங்கு காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகளும், பூக்களும் வருவதில் சிக்கல் உள்ளது. சரக்கே வராமல் சில்லரை வியாபாரிகள் என்ன செய்வது. எனவே, கலெக்டரை சந்தித்த பிறகுதான் என்ன நிலை என்பது எங்களுக்கு தெரிய வரும்’ என்றனர்.

Related Stories: