கலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்

நன்றி குங்குமம் தோழி
Advertising
Advertising

தமிழகத்தில் பாலில் 33% கலப்படம் இருப்பது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோ  தெரிவித்தார். யூரியா, சீன மாவு, மைதா மாவு போன்றவை பாலில் கலக்கப்படுகிறது. இது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்தியாவில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாலில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கவும், சட்டத் திருத்தங்களை  மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது. இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழகக் கிளை தலைவரும் சுகாதாரத்துறை  முன்னாள் இயக்குநருமான எஸ்.இளங்கோ கூறியதாவது, ‘‘2006ல் உள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு 6  மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,500 அபராதம் என்றுள்ளது.

இதில் முதல்கட்டமாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கவும், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவிலேயே மிகவும் முக்கியமானது பால். குழந்தைகள் முதல் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பால்  அவசியம். மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் 57% பாலில் கலப்படம் உள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பாலை ஆய்வு  செய்தபோது, அதில் 33% கலப்படம் இருந்தது தெரியவந்தது. பாலில் தண்ணீர் சேர்த்து கலப்படம் செய்கின்றனர்.

பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்களை நீக்கி, அதற்கு பதில் கிழங்கு மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவை கலக்கின்றனர். சீனாவில் இருந்து  இறக்குமதியாகும் வெள்ளை மாவையும் கலக்கிறார்கள். சீன வெள்ளை மாவு கலந்த பால், சென்னைப் புறநகர் பகுதிகளில் பரவலாக விற்பனை  செய்யப்படுகிறது. பதரவைப்பது என்னவென்றால் 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியாவை கெட்டித்தன்மைக்காக கலக்கிறார்கள் என்பது தான். கலப்பட  பாலை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல்,  நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

யூரியா கலந்த பாலினால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது’’ என்றார் இளங்கோ.  இந்த பாதிப்புக்கு எளிதாக தீர்வு கண்டுள்ளார் சென்னை பொறியியல் கல்லூரி மாணவி ஹேமலதா. ‘‘சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பொறியியல்  கல்லூரியில் பி.டெக் உயிரித்தொழில்நுட்பவியல் துறையில் இறுதியாண்டில் படிக்கிறேன்’’ என்று பேச துவங்கினார் ஹேமலதா. ‘‘என்னுடைய  கடைசியாண்டு  திட்டப்பணிக்காக ‘நவீன பூச்சிக்கொல்லி கண்டறியும் கருவியின் கட்டுருவாக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் மீதான அதன்  பயன்பாடு' என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ளேன்.

இதில் பாலில் யூரியா கலப்படத்தைக் கண்டறியும் பட்டை, பூச்சிக்கொல்லி மருந்தை கண்டறியும் பஞ்சினை கண்டுபிடித்திருக்கேன். யூரியா சோதனை  பட்டை ரூ.2-க்கு 10 பட்டைகள், பூச்சிக்கொல்லி சோதனைக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்கெட்சின் பஞ்சு சுருள் ரூ.5-க்கு 10 சுருள்கள். என்னுடைய  இந்த கண்டுபிடிப்புக்கு இந்திய தேசிய பொறியியல் கழகத்தின் இந்த ஆண்டின் ‘புதுமையான கண்டுபிடிப்புக்கான விருது' கிடைத்துள்ளது. இன்றைய  சூழலில் மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கும் ஆர்கானிக் உணவுகளையும் எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது தான் என்னுடைய கண்டுபிடிப்புக்கு ஒரு ஊன்று கோலாக மாறியது. என்னோட அப்பா சென்னை மாநகர போக்குவரத்தில் ஓட்டுநராக  பணிபுரிகிறார். ஒரு நாள் அவர் என்னிடம் “சாமானியர்களாலும் அறிவியலை எளிதாக புரிந்து கொண்டு கண்டுபிடிக்கும் அளவுக்கு ஏன் இல்லை’’ என்ற  கேள்வியை என் முன் வைத்தார். இந்த இரண்டு கேள்விகளும் தான் என்னை அதற்கான ஆய்வில் ஈடுபட செய்தது. அறிவியல் என்பது  படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாமானியரும் அதை பயன்படுத்தலாம்.

அதற்கு முதலில் மிகவும் எளிமையான பூச்சிக் கொல்லி கண்டறியும் பட்டை பற்றி ஆய்வு செய்ய திட்டமிட்டேன். இது குறித்து என் ஆய்வின்  வழிகாட்டி உதவிப் பேராசிரியர் யுவராணியிடம் கூறினேன். அவர் தான் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். மேலும் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் பாபுமனோகரன் அவர்களின் உதவியுடன் கல்லூரி ஆய்வகத்தில் நான்கு மாதம் கடுமையாக ஆய்வில்  ஈடுபட்டேன். அதில் வெற்றியும் கண்டேன்’’ என்றவர் தன்னுடைய ஆய்வு குறித்து விவரித்தார். ‘‘பாலில் யூரியா உள்ளதா என்று கண்டறிய ஒரு துளிப்  பால் போதுமானது.

பட்டை வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறினால் பாலில் யூரியா உள்ளதை உறுதி செய்யலாம். ஆர்கானிக் என்று விற்கப்படும் பழச்சாற்றினை  பூச்சிக்கொல்லி சோதனைக் கருவியில் விட்டு சோதிக்கையில் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் நீலத்துக்கு மாறினால் அது ஆர்கானிக்  இல்லை. யூரியா கண்டறியும் சோதனைப் பட்டைக்கு A4 தாள்களும். பூச்சிக்கொல்லி சோதனைக் கருவிக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்கெட்சின் பஞ்சு  சுருளே போதுமானது. இதில் தகுந்த வினைப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை ஆய்வில் பயன்படுத்த உதவுகிறது. இந்த யூரியா பட்டைகளை  மற்றும் பஞ்சு சுருள்களை தான் நான் குறைந்த விலையில் கண்டுபிடித்து இருக்கேன்.

அண்மையில் பாலில் யூரியா கலப்படம் இருப்பதாக சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் ஆர்கானிக் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்குவது  குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்னுடைய இந்த பட்டைகள் மற்றும் பஞ்சு சுருள்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஆய்விற்கு இது தீர்வாக  அமையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கலப்படத்தைத் தடுப்பதற்கு தொடர் முயற்சிகளை அரசாங்கம் செய்வது ஒருபுறம் என்றாலும்  ஒவ்வொருவரும் நாம் சாப்பிடும் உணவுகளின் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்வது அவசியம். எல்லா வகையான பூச்சிக்கொல்லிகளை  கண்டறியும் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக’’  கூறினார் ஹேமலதா ராஜேந்திரன்.

தி.சபிதா ஜேஸ்பர்

Related Stories: