கொளத்தூர் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு : சைதை துரைசாமியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : கொளத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் சைதை துரைசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதுகுறித்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலினும், அதேப்போன்று அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர்.

இதையடுத்து திமுக தரப்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதி தேர்தலின் போது விதிமுறைகளை மீறி ரூ.30 லட்சம் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கொளத்தூர் தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என சைதை துரைசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றிப்பெற்றது செல்லும் என கடந்த 2017ம் ஆண்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

 இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக சைதை துரைசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கடந்த 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை தேர்தலின் போது அதிகப்படியான பணப்பட்டுவாடா நடைபெற்றது. மேலும் இதில் வெளிநாட்டு கரன்சிகளும் உள்ளடங்கும். அதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

 இந்த நிலையில் சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சமீம் மாலிக் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலையிலான அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடந்தது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக நிராகரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, கொரோனா காலத்தில் வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சில் நடந்து வரும் இந்த சூழலில் உடனடியாக எடுத்து விசாரிக்கும் அளவிற்கு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. இருப்பினும் அடுத்த நான்கு வாரங்களுக்கு பின்னர் வழக்கமான பட்டியலில் மனு இடம்பெற்றால் விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

Related Stories: