வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது ஏன்?.. கமல்ஹாசன் கேள்வி

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது ஏன்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் கட்சி ஏஜென்டுகளும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு சிசிடிவி கேமரா வைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும் பல தொகுதிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வெளியாட்கள் நுழைவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது ஏன்?. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கண்டெய்னர் லாரி நுழைவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் புது புது வைஃபை வசதிகள் உருவாவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி பல்வேறு மர்மமான நடவடிக்கைகள் இருக்கின்றன.

வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படும் மர்மங்களால் பயம் ஏற்படுகிறது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: