தாராபுரம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர் ஸ்டிரைக்-பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

தாராபுரம் : தாராபுரம் நகராட்சியில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தினசரி 25 முதல் 35 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை தனியாகவும் மக்காத குப்பைகள் தனியாகவும் தரம் பிரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக தயாரித்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தின் தினசரி நடைபெறும் இந்த அத்தியாவசிய பணிகளுக்காக நகராட்சியால் 185 நிரந்தரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் விரிவடைந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப 80க்கும் குறைவான ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் 145 பேர் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அன்றாட பணிகள் நடைபெற்று வந்தன. இவர்களில் 25க்கு மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஆகவே இருந்து வருகின்றனர். மேலும் தற்காலிக பணியாளர்கள் 145 பேருக்கு பிஎப், இஎஸ்ஐ போன்ற அடிப்படை சலுகைகள் வழங்கவில்லை. இவர்களுக்கு மாதம்தோறும் 30ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதற்கு பதிலாக 50 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

 ஆனால் நிரந்தர பணியாளர்களை விட ஒப்பந்த பணியாளர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கி துப்புரவு பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் இவர்களுக்கு மாதத்தில் அரை நாள் விடுமுறை கூட வழங்கப்படுவதில்லை. இதை முறையிட்டால் உடனே பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே திரண்டு நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.  

இதனால் நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் மலைபோல குவிந்து தேங்கிக் கிடக்கின்றன. நாடு முழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவத் தொடங்கி உள்ள நிலையில் தாராபுரம் நகரில் குப்பை அள்ள துப்புரவு பணியாளர்கள் வராதது நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்யும் என சமூக ஆர்வலர்கள் பலர் கவலை தெரிவித்தனர்.

Related Stories:

>