இன்டர்லாக் முறையில் அமைத்த சாலையால் விபத்து அபாயம்-வேகத்தடை அமைக்க கோரிக்கை

கூடலூர் : கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை இரும்பு பாலம் பகுதியில் மாநில நெடுஞ் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதி தற்போது இன்டர்லாக் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெறும் பகுதி சரிவான சாலை பகுதியாகும். நீலகிரிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த சாலைப் பகுதி வழியாகவே பயணம் செல்கின்றனர். ஏற்கனவே தார் சாலையாக இருந்த பகுதி மீண்டும் இன்டர்லாக்ஸ் சாலையாக மாற்றப்படுவது  ஏன் என்பது குறித்து வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக இந்த சரிவான சாலை பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டதால் மழை காலங்களில் வாகனங்கள் வேகமாக வரும்போது பிரேக் பிடிக்காமல் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், சாலையின் ஒரு பக்கவாட்டு பகுதி பள்ளமாகவும் பலமான பகுதியாகவும் ஆற்றங்கரையோர பகுதியாகவும் உள்ளது என்றும், பொதுவாக சாலையின் சமதளப் பகுதியில்  தண்ணீர் தேங்கி சாலை சேதம் அடையும் பகுதிகளிலேயே இன்டர்லாக் கற்கள் பாதிக்கப்படுவது வழக்கம் என்றும், சரிவான இந்த சாலை பகுதியில் மழைநீர் வழிந்தோடி விடும் நிலையில் தார் சாலையை அகற்றிவிட்டு இன்டர்லாக் சாலையாக மாற்றி அமைத்ததன் காரணம் என்ன என்பது குறித்தும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் இப்பகுதியில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: