கூடலூர் பகுதியில் மழைக்காலம் முடிந்தும் சீரமைக்காத சிறு பாலங்கள்

கூடலூர் : கூடலூர் பந்தலூர் பகுதியில் கடந்த ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பருவ மழையின் காரணமாக பல இடங்களில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இப்பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சிற்றாறுகள் ஓடும் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்தன. இதில் பல இடங்களில் பாலங்கள் சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து தடைபட்டது.

கூடலூர் பகுதியில் மங்குழி,  புறமணவயல், துப்புகுட்டி பேட்டை போன்ற இடங்களிலும் நாடுகாணி, தேவாலா, புளியம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த சிறு பாலங்கள் இதுவரை சீரமைக்க படாமல் உள்ளன.

பல இடங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தற்காலிக சீரமைப்பு பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இப்பகுதிகளுக்கு அவசர தேவைகளுக்காக ஆட்டோ, ஜீப் மற்றும் ஆம்புலன்சுகள்உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.

மீண்டும் அடுத்த மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ளதால் மேலும் பாதிப்புகள் அதிகமாகி சாலை துண்டிக்கும் நிலை ஏற்படும் என்பதால் சேதமடைந்துள்ள சிறு பாலங்களை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: